Tuesday, 2 November 2010

Rice Payasam

அரிசி பாயசம்

தேவையான பொருட்கள்
அரிசி - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
முந்திரி - 15
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 15
நெய் - 50 கிராம்
தேங்காய் துருவியது - சிறிதளவு
மில்க் மெய்டு - 2 ஸ்பூன்


செய்முறை
1.
முதலில் அரிசியை நன்கு வறுத்து பொடியாக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் கொட்டி வேக விடவும்.

2.
அரிசி வெந்ததும் வெல்லத்தைப் போட்டு கலக்கவும்.

3.
பிறகு மில்க் மெய்டு சேர்க்கவும்.

4.
முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்

5.
பொடி செய்த ஏலக்காயையும் தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு
1.
தேவையானால் மில்க் மெய்டுக்கு பதில் பால் சேர்த்துச் செய்யலாம்.


BY
Sathyaraj Aruchamy

Dual Ganesh



விக்னகரன்
          மீனாட்சியம்மனின் சன்னிதானத்தில் அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள். இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள். இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.

          பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் உண்டு. ஆகமங்களில் அது சொல்லப்பட்டிருக்கும். விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள். மற்றபடிக்கு,  காரியசித்திக்காகவும் படிப்பார்கள். 

          இதற்குத் துணைநூல் ஒன்று உண்டு. காரியசித்தி மாலையைப் படித்து, அதனால் காரியவெற்றி பெற்றவர்கள், இந்த துணைநூலைப் படித்து விநாயகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்காக
இந்த நூல்.

          காரியசித்தி மாலை 'அட்டகம்' என்னும் பிரபந்தவகையைச் சேர்ந்தது. இந்த நூல் 'பஞ்சகம்' அல்லது 'பஞ்சரத்தினம்'  என்ற வகையைச் சேர்ந்தது
          அந்நூலின் கடைசிப் பாடலில்,

      வேண்டிய அடியார்க்கெல்லாம்
            விக்கினம் கெடுப்பாய் போற்றி
      வேண்டி வந்தனை செய்யார்க்கு
            விக்கினம் கொடுப்பாய் போற்றி
      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம் 
            விளைத்தருள் விமல போற்றி
      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும்
            மறமிகு மள்ள போற்றி.

          இந்தப்படலின் முதலிரு அடிகளைக் கவனியுங்கள். முதல் அடியில் 'விக்கினம் கெடுப்பாய்' என்றும் அடுத்த அடியில் 'விக்கினம் கொடுப்பாய்' என்றும் வருகிறதல்லவா?
          அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
          இரண்டையுமே செய்பவராகத்தான் பழஞ்சைவர்கள் விநாயகரை வணங்கியிருக்கிறார்கள்.
          இப்போது, ஒரு காரியத்தைத் தொடங்குமுன்னர், அக்காரியத்தைத் ொடங்குவதற்குத்  தடங்கல் இல்லாமலும், தொடங்கிய காரியம் தொடர்ந்து நடக்கவும், அக்காரியத்தில் விரவியிருக்கும் இயற்கையான தடைகள் ஏற்பட்டுவிடாமலிருப்பதற்கும், அக்காரியம் வெற்றி பெறுவதற்காகவும் விநாயகரைவணங்குகிறோம்.

          இதில் மூன்று வெவ்வேறு குறிக்கோள்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் பாசிட்டிவ் நெகட்டிவ் ஆகிய இரண்டுமே அடங்கியுள்ளன. 
         காரியத்தடையை நீக்குவதும் காரியசித்தி கொடுப்பதும் பாசிட்டிவான தன்மைகள்.
          வணங்கப்படவில்லையென்றால் காரியத்தடையையோ தோல்வியையோ ஏற்படுத்துவது நெகட்டிவான அம்சம்.
          இரண்டையுமே விநாயகர்தான் செய்கிறார்.
          இடையூறுகள் தடங்கல்கள், தடைகள் போன்றவற்றை விக்கினம் என்று சொல்கிறோம் அல்லவா? 
          விக்கினத்தை அகற்றுபவன் அல்லது அழிப்பவன் 'விக்கினஹரன்'. 
          விக்கினங்களைச் செய்பவன் அல்லது ஏற்படுத்துபவன், 'விக்கின கரன்' அல்லது 'விக்கின கிருது'.
          விநாயகர் கவசத்தில் பார்க்கிறோமல்லவா -- அந்த ஏழாவது பாடலில்....

          ஏகதந்தர் பகல்முழுதும் காக்க; இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
          ஓகையின் *விக்கினகிருது* காக்க; இராக்கதர்,பூதம், உறுவேதாளம்,
          மொகினி,பேய், இவையாதி உயிர்த்திறத்தால் வரும்துயரும், முடிவிலாத
          வேகமுறு பிணிபலவும் விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்து காக்க.

          இதே பொருளில் உள்ளதுதான் 'விக்கினவர்த்தனன்' என்னும் பெயரும்.

          அக்கினியில் சித்தீசர் காக்க; உமாபுத்திரர் தென்னாசை காக்க;
          மிக்க நிருதியில் கணேசுரர் காக்க; *விக்கினவர்த்தனர்* மேற்கென்னும்
          திக்கதினில் காக்க; வாயுவில் கசகன்னன் காக்க; திகழ் உதீசி 
          தக்க நிதிபன் காக்க; வட கிழக்கில் ஈசநந்தனரே காக்க.

          இதற்கு விநாயக புராணத்தில் ஒரு கதை இருக்கிறது.

         'காலரூபி' என்னும் ஒரு கொடிய சிருஷ்டி ஏதோ ஒரு காரணத்தால் ஏற்பட்டுவிட்டது. அதை அசுரன் என்பதா, அல்லது அரக்கன் என்பதா? அதெல்லாம் அவன் இல்லை. அவன் அவனேதான். 

          இயற்கையின் அமைப்பில் என்னென்ன வகையான இடையூறுகள், தடங்கல்கள், தடைகள், இடைஞ்சல்கள், கெடுதல்கள், விக்கினங்கள் எல்லாம் இருக்கின்றவோ அத்தனை வடிவிலும் அந்த காலரூபி தோன்றி அவற்றைச் செய்தான். ஆகையினால் அவனுக்கு 'விக்கினன்' என்ற பெயரும் ஏற்பட்டது. 

          வசிஷ்டர் முதலிய ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகப்பெருமான் அவனை அடக்குவதாக வாக்களித்தார்.

          முதலில் தன்னுடைய அங்குசத்தை ஏவி, காலரூபியைப் பிடித்துவரச் செய்தார். ஆனால் அவனோ யுகப்பிரளயமாக மாறிச் சுழன்று எல்லாவற்றையும் மூழ்கடித்தான். அதெல்லாம் விநாயகர் முன்னிலையில் எடுபடவில்லை. அதன்பின்னர் அவனால் முடிந்தமட்டும் விதம் விதமாகப் போரிட்டுப்பார்த்தான். 
    
          முடிவில் விநாயகர், ஒரு வேலாயுதத்தை அவன்மீது ஏவினார். அதனுடைய ஆற்றல்
தாங்காது காலரூபி, விநாயகரிடமே சரணடைந்தான்.



விக்னராஜன்
விக்னவிநாயகர்

          அப்போது அவன், "கருணாமுர்த்தியே! என்னுடைய அபசாரங்களையெல்லாம் மன்னித்து என்னையும் உங்களின் அடியானாக ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று கெஞ்சினான். 
          விநாயகர், "இனி நீ என் பக்தர்களுக்குத் துன்பம் கொடுக்கக்கூடாது. என்னை வணங்காதவர்களையும் நினைக்காதவர்களையும், எனக்கு அபசாரம் செய்பவர்களையும் நீ உன்னுடைய இயல்பின்படி பல விக்கினங்களின் வடிவெடுத்து நீ பீடித்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக நீ நடக்கக்கூடாது," என்று ஆணையிட்டார். 
          விக்கினன் இன்னுமொரு வரத்தையும் கேட்டுப் பெற்றுக ்கொண்டான்.                   "தங்களுடைய  திருப்பெயருடன் என்னுடைய பெயரையும் சேர்த்து வழங்கி யருள வேண்டும்".
          விநாயகர் அவ்வாறே தனக்கு 'விக்கினராஜன்' என்றும் 'விக்கினேஸ்வரன்' என்றும் பெயரைச் சூட்டிக ்கொண்டார். விக்கினஹரன், விக்கினநாசனன், விக்கினகரன், விக்கினகிருது, விக்கினவர்த்தனன் என்பவை யெல்லாம் காரணப்பெயர்களாக ஏற்பட்டன.

          இன்னும் கொஞ்சம் விசித்திரமான தகவல்கள் உள்ளன..... 

    இரட்டைப்பிள்ளையார்

          விநாயகரின் இரண்டுதன்மைகளையும் பிரதிபலிக்கும்வகையில் மூர்த்தங்களை நிறுவி அந்தப்பண்டைய சைவர்கள் வணங்கினார்கள். இந்த வழக்கம், காணாபத்தியம்(கணபதி வழிபாடு) என்பது தனியரு சமயமாகத் திகழ்ந்த காலத்திலிருந்து வந்திருக்கலாம். 
         மேலும் பழஞ்சைவத்தில் ஆகமத்தாந்திரீகக்கூறுகள் மிக அதிகமாக இருந்தன. அவற்றிற்கும் முற்பட்ட சில கூறுகளும் இருந்தன. அவற்றில் பெரும்பகுதி இப்போது கிடையாது. 
          காணாபத்தியம் சைவத்தில் கலந்தபோது அந்தக்கூறுகளில் சில சைவத்துள்ளும் வந்துசேர்ந்தன. 
          விநாயகரை விக்கினகரனாகவும் விக்கினஹரனாகவும் வழிபடும் வழக்கம் பழமையானதுதான். இருவகைப்பிள்ளையார்களையும் தனித்தனியாக வணக்குவதோடு சிற்சில இடங்களில் சேர்த்தும் வணங்கியுள்ளனர்.
          அப்படிபட்ட சிற்சில இடங்களில் ஒன்றுதான் மீனாட்சியம்மன் சன்னிதியின் வாயிலின் தென்புற மேடை.
         அந்த இரட்டைப் பிள்ளையார்களில் ஒன்று விக்கினஹரன்; இன்னொன்று விக்கினகரன்.
          சிவாலயங்களில் விநாயகர் சன்னிதி தென்மேற்கு மூலையில் நிறுவப்படும்.அங்கு கிழக்குப்பார்த்தாற்போல விநாயகர் அமர்ந்திருப்பார். அவர் விகேஸ்வரன், விக்னஹரன்.
          அதே தென்மேற்கு மூலையில் வடக்குப்பார்த்தாற்போல சில மூர்த்தங்கள் இருக்கும். அவை சப்தமாத்ரிகா என்னும் பிராஹ்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி,  வாரஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர். அவர்களுடன் லட்சுமிக்கு மூத்தவளாகிய ஜ்யேஷ்டா தேவி தன்னுடைய புதல்வி, புதல்வனுடன் அமர்ந்திருப்பாள். அந்த இடத்திலும் ஒரு விநாயகர் மூர்த்தம் இருக்கும். அவர் விக்கினகரன். 
          இந்த அமைப்பை மிகவும் பழமையான சிவாலங்களில் மட்டுமே காணலாம்.மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னிதியைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் இருக்கின்றது. மிகச்சுத்தமாகப் பார்க்கவேண்டுமானால் சிவகங்கை மாவட்டத்து திருப்புத்தூரில் உள்ள திருத்தளீசுவரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும். பிரான்மலை திருக்கொடுங்குன்றீசர் கோயிலிலும் உண்டு.
          நன்மை நடக்கவேண்டும் என்று நினக்கும் அதே வேளையில் கெடுதல் நடக்காமல் இருக்கவும் வேண்டினர். கெடுதலைத் தடுப்பதற்கும் தெய்வங்களை வழிபட்டனர். கெடுதலைக்கொடுக்காமல் இருப்பதற்காகவும் தெய்வங்களை வழிபட்டனர். 
          நாட்டுக்காவலர்கள் தம்மைக் காக்கவேண்டும் என்று எண்ணி 'பாடிகாவல்' என்னும் வரியை அந்த பாடிகாவலர்களுக்குச் செலுத்தியிருக்கிறார்கள். 'பாடிகாவல்' என்றதும் 'body-guard' என்னும் சொல்லுடன் முடிச்சுப்போட்டுவிடவேண்டாம். இந்த 'பாடி, குடியிருப்பைக் குறிக்கும். அதே சமயம், கொள்ளைக்காரர்கள், தக்கியர் போன்றவர்கள் தங்களுக்குக் கெடுதல்கள் ஏதும் விளைவிக்காமல் இருப்பதற்கென்று 'தெண்டு'  எனப்படும் கப்பத்தையும் கொடுத்திருக்கிறார்கள். 

          மலேசியாவில் இந்த வழக்கம் இப்போது அதிகம் இருகிறது.  குண்டர் ஜமா நம்மை ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக குண்டர் ஜமாவுக்கு 'protection money' என்னும் 'மாமூல்' கொடுக்கிறோம். அந்தந்த வட்டாரம் ஒவ்வொரு குறிப்பிட்ட ஜமாவின் வசம் இருக்கும். 

         

விக்னஹரன்
விக்னராஜன்

          திபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது. விக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது. மிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது. அதை ஸ்கான் செய்துபோட்டால் பொருத்தமாக இருக்கும். அதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின் மூர்த்தங்களையும் போடலாம். நம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.    

           மாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான் கிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.
           இதில் ஒரு விந்தை என்னவென்றால், விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன.
           பெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இருக்கும். அது சைனாவில் இருக்கிறது.
            மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது. இது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது. முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து இடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால் வடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும். அதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள் இருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும். அந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம். 
            சில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம். அந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.
           '   இரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும்  ் ஜப்பானில் காணப்படும். இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு நிற்பதைப ்போன்ற வடிவம் அது.